அரச வைத்தியர்களின் போராட்டாம் நாட்டுக்கு பாதகமானது!

0
181

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டின் வைத்தியதுறைக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரசாங்கம் உடனடியாக அவர்களது கோரிக்கை தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமூகமான தீர்வை வழங்க வேண்டுமென இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இல்லாது சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் வைத்தியத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு மருத்துவத் தேவைக்காக செல்பவர்கள் முதல், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெருபவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் சுமூகமான தீர்வை வழங்க வேண்டும்.

அரச வைத்திய அதிகாரிகளின் போராட்டங்களால் பொது மக்கள் தான் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியத்துறையில் தொழிற்சங்க நடவடிக்கை என்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தான விடயமாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையகப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைளுக்குச் சென்றுள்ளவர்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்றைய தினம் மருத்துவ சேவைகள் இடம்பெறாமையால் தூர பிரதேசங்களில் இருந்து வருகைத்தந்துள்ளவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே, அரசாங்கம் உடனடியாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைள் தொடர்பில் சுமூகமான தீர்மானம் எடுக்க வேண்டும்” எனவும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here