அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியாலும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் நாடு அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளதுடன், பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அமைச்சரவை அல்லது அரசின் உயர்மட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் பங்காளிக்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு எடுப்படுவதில்லையென அவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.
உட்கட்சி பூசல் காரணமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என மூவரும் விரும்பிய போக்கில் தீர்மானங்களை எடுத்து செல்கின்றனர். கெரவலப்பிட்டி ஒப்பந்தம் கைச்சாத்து தொடர்பில் அமைச்சரவையில்கூட கலந்துரையாடப்படவில்லை. நாட்டை சர்வாதிகார போக்கில் கொண்டுசெல்வதற்கான அடித்தளத்தையே இவர்கள் இட்டுவருகின்றனர்.
அதன்முதல்படிதான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம். பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கோப், கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோப் மற்றும் கோபா குழுவில் பங்காளிக் கட்சியின் உறுப்பினர்களே தலைவர்காக இருந்தனர். இவர்களின் பதவியும் பறிபோயுள்ளது.
இதேவேளை, மறுபுறம் பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருகிறது. இதனை முறையாக முகாமைத்துவம் செய்யும் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை. தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தவறான பொருளாதார தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துவருகிறது. இந்த அரசாங்கத்தை தொடர்ந்து தான்தோன்றித்தனமான போக்கில் பயணிக்கவிட்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் நாடு அதலபாதாளத்தை நோக்கி சென்றுவிடும். அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசைவிட்டு வெளியேற வேண்டும். நாட்டின் மீதும் மக்களின் மீதம் அக்கறை இருந்தால் அந்த தீர்மானத்தை அரசின் பங்காளிக் கட்சிகள் விரைவில் எடுக்க வேண்டும் என்றார்.