செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றார். இது அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கையாகும் – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் ஏ.எஸ்.பி. மற்றும் சிஐடியினர் இருக்கின்றனர். இது மக்களை அச்சுறுத்தும் செயலாகும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.,
” செம்மணி மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட தடயப் பொருட்களை பொதுமக்களுக்கு முன்பாக வைத்து அவர்கள் அதனை அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதற்கமைய செம்மணியில் பொது மக்களை அழைத்து அந்த தடயப்பொருட்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், நீதி அமைச்சின் செயலாளர், அங்கே வேலை செய்து கொண்டிருக்கின்ற , இந்த எலும்புக்கூட்டு அகழ்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றார்.
இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். இது அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அல்லவா?இது அரசியல் தலையீடு இல்லையா?இது ஒரு அழுத்தத்தை கொடுக்கும் விடயம் அல்லவா? எனவும் அவர் கேள்விகளை எழுப்பினார்.
நீதிமன்றம் நடத்துகின்ற ஒரு செயற்பாட்டில் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும்.” எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.