இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என கொழும்பு அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரும் நாட்களில் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் இலங்கையில் மிகப்பெரிய அமைச்சரவை காணப்பட்டதுடன், அளவுக்கு அதிகமான ராஜாங்க அமைச்சுகளும் உருவாக்கப்பட்டன. எனினும் இம்முறை அவ்வாறான இருக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 அமைச்சர்களை கொண்ட மிகவும் குறுகிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. இதன்போது ராஜாங்க அமைச்சுக்கள் தவிர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேவை ஏற்படின் சில ராஜாங்க அமைச்சுகளும் வரலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 15 அமைச்சர்களில் தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எந்தவொரு அமைச்சும் செல்லக் கூடாது என்பது தொடர்பில் ரணில் கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது.
அது சாத்தியமானால் மற்றுமொரு அரசியல் நெருக்கடிக்கு வித்திடும் ஆரம்ப புள்ளியாக இது இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றி, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பை கொண்டு வருவதில் ரணில் உறுதியாக உள்ளார். இவ்வாறான நிலையில் அடுத்து வரும் நாட்களில் ரணில் – கோட்டாபய மோதல் கூட தீவிரம் அடையலாம்.
கடந்த மைத்திரி – ரணில் ஆட்சியிலும் இவ்வாறான நெருக்கடி நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.