இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா(28) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜும் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைவியில் சிகி்ச்சை பெற்றுவருகிறார்.
இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட அருண்ராஜா காமராஜ், 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களின் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு ‘கனா’ படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அருண்ராஜா. இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா மறைவுக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.