றொரண்டோ (Toronto) நகரின் பாதாளப் பகுதி (PATH) கடையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமில்லாத பெண்ணொருவரைக் குத்திக் கொன்ற ரோஹினி பிசேசர் (Rohinie Bisesar) என்ற பெண்ணிற்கு நிபந்தனையற்ற விடுதலை (Absolute Discharge) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 டிசம்பர் 11 அன்று, றொரண்டோவின் ‘பாதாளப் பகுதி’ (PATH) நெட்வொர்க்கில் உள்ள மருந்தகம் ஒன்றில், ரோஸ்மேரி ஜுனர் (Rosemarie Junor – 28) என்ற பெண்ணை ரோஹினி பிசேசர் குத்திக் கொன்றார்.
ரோஹினி ‘ஸ்கிசோப்ரினியா’ (Schizophrenia) எனும் மனச்சிதைவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், குற்றவியல் பொறுப்பற்றவர் (Not Criminally Responsible) என 2018-ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனநல மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அவர், 2021 முதல் சமூகத்தில் வாழத் தொடங்கினார்.
தற்போது அவர் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்த மாட்டார் என ஒன்டாரியோ மறுஆய்வு வாரியம் (Ontario Review Board) முடிவு செய்துள்ளது.
ரோஹினி தனது உடல்நலனை மேம்படுத்திக் கொள்ள எடுத்த தீவிர முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ள வாரியம், சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு இந்த முழுமையான விடுதலை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.




