அவசர எரிபொருள் கொள்வனவு கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து நேர்மறையான பதில்

0
3

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தளம்பல் நிலையை எதிர்கொள்ளவும், இலங்கையில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் கடந்த 6ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன்போது, போர்ச் சூழல் நீடித்தால் இலங்கைக்குத் தேவையான மேலதிக எரிபொருள் கையிருப்புகளை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்வது குறித்து விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையினால் நாட்டின் எரிசக்தித் தேவையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தனது நேர்மறையான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர், ‘இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகள் கிடைத்துள்ளன. இந்தியா அண்டை நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. எமது நாட்டின் உள்நாட்டுத் தேவை மற்றும் சுத்திகரிப்புத் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here