அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை

0
4

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ள சூழலில், இதற்கான தீர்வாக ரஷ்ய எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான மற்றுமொரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ரஷ்ய அரசாங்கத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துவதாகத் தூதுவர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குத் தேவைப்படும் எந்த நேரத்திலும் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் என்பதை இக்கலந்துரையாடலின் போது தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here