அவிஷ்க அதிரடி 2வது முறையாகவும் இறுதி போட்டிக்கு தெரிவாகியது ஜப்னா கிங்ஸ்.

0
149

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் 23 ஓட்டங்களினால் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சதம் விளாசி நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை பெற்றார்.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசூன் சானக்க தல‍ைமையிலான தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எதிரணி அணித் தலைவரின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 210 ஓட்டங்களை குவித்தது.

ஜப்னா கிங்ஸ் குவித்த 210 ஓட்டங்களில் 170 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ரமானுல்லா குர்பாஸ் ஆகியோர் பெற்றனர். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் 33 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸுக்கன தமது பங்களிப்பினை வழங்கினர்.

40 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த அவிஷ்கா, அடுத்து எதிர்கொண்ட 23 பந்துகளில் வேகமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.

நடப்பு எல்.பி.எல். தொடரில் ஒரு துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற முதலாவது சதமாக இது மாறியது. அதேநேரம் இறுதி ஓவரில் சதத்தை பூர்த்தி செய்து போட்டி வரலாற்றில் இறுதி ஓவரில் சதம் குவித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

மொத்மாக 64 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்க 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களுடனே இறுதி ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது ஜப்னா கிங்ஸ்.

120 பந்துகளில் 211 ஓட்டங்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியால் 20 ஓவர்களின் நிறைவில் 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.

துடுப்பாட்டத்தில சமிக கருணாரத்ன 47 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பெற்றது அணியின் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாக அமைந்தது.

சமிக்காவின் இன்னிங்ஸும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு இல்லாததால் அணியின் வெற்றிக்கு எந்தவித பங்களிப்பினையும் அளிக்கவில்லை.

இது சமிக்காவின் டி-20 கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரை சதமாகும். தொடக்கத்தில் சற்று அழுத்தத்துடன் துடுப்பெடுத்தாடிய சமிக, ஜப்னா அணித் தலைவர் திசர பெரேராவின் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை அடித்து அதிரடியான ஆட்டத்தை ‍ஆரம்பித்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காது வெற்றிக்காக போடராடிய அவர் மொத்தமாக 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரி அடங்கலாக 75 ஓட்டங்களை பெற்றார்.

தம்புள்ளை துடுப்பாட்ட வீரர்கள் 21 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு வேகமான தொடக்கத்தை பெற்றனர். எனினும் பின்னர் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களுக்கு இடையில் சீரான விக்கெட் பராமறிப்பினை மேற்கொள்ள முடியாது போனது.

இதனால் இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை மாத்திரம் அவர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

பந்து வீச்சில் ஜப்னா அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் நாளை நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பானுக ராஜபக்ஷ தல‍ைமையிலான காலி கிளடியேட்டர்ஸுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த ஆட்டம் நாளை ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here