ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான்- இலங்கை இன்று மோதல்!

0
34

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேச அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த நிலையில் அபுதாபியில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது.

அதனால் இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்கும் அணி ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.

பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் சகிப்சதா பர்ஹான், பஹர் ஜமான் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சைம் அயூப், கேப்டன் சல்மான் ஆஹாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசை தான் அவர்களின் பலவீனமாக உள்ளது. அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் வலு சேர்க்கிறார்கள்.

சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, கமிந்து மென்டிஸ் என பேட்டிங் பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இலங்கை அணி தவறுகளை திருத்திக் கொண்டு சாதிக்க முயற்சிக்கும்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் பாகிஸ்தானும், 10-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here