முறையற்ற அரச நிர்வாகத்தினால் நாடு அழிவை நோக்கி பயணிக்கிறது. பாரம்பரிய அரசியல் முறைமைகளினால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
சிறந்த திட்டங்களினாலும், நவீன கொள்கைக்கமைய நாட்டை எம்மால் முன்னேற்ற முடியும். ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராகவுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை ( 20) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாரம்பரியமான அரசியல் முறைமையினால் நாடு பெரும் பாதிப்பினை எதிர்க்கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் காலம் காலமாக காணப்பட்ட முறையற்ற நிர்வாகத்தை தீவிரப்படுத்தி நாட்டை அழிவு பாதை நோக்கி கொண்டு செல்கிறது. பாரம்பரியமான அரசியல் முறைமையினால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
நாடு பல்துறைகளில் வீழ்ச்சியடைவதற்கு ஊழல் மோசடி நிறைந்த அரசியல் முறைமை பிரதான காரணியாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் மோசடி அனைத்து துறைகளிலும் வியாபித்துள்ளது.
கொவிட் தாக்கத்தினால் நாட்டு மக்கள் உயிரச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பி.சி.ஆர் பரிசோதனை ஊடாகவும்,மருத்துவ சிகிச்சை சாதனங்கள் விநியோகத்தின் ஊடாகவும் மோசடி செய்துள்ளார்கள்.
தூரநோக்கமற்ற வகையில் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவை முழு நாடும் தற்போது எதிர்க்கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வீதிக்கிறங்கி போராடும் போது அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் சீன நிறுவனத்தின் ஊடாக உர இறக்குமதி ஊடாகவும், நெனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி ஊடாகவும் நிதி மோசடி செய்துள்ளார்கள். இவ்வாறானவர்களினால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
இரண்டு பிரதான கட்சிகளின் ஆட்சியினால் நாடு முன்னேற்றமடையவில்லை என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை நவீன அரசியல் முறைமை ஊடாக எம்மால் முன்னேற்ற முடியும். நாட்டை பொறுப்பேற்க தயாராகவுள்ளோம் என்றார்.