இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (26.05.2022) உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
அந்த வகையில் மலையப் பகுதிகளில் உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றிருந்தன.
இந்த வழிபாடுகளில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அத்துடன் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அன்ன தானங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இன்றைய நினைவேந்தல் வழிபாடுகளிலும் அன்ன தானம் வழங்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி சுகவீனம் காரணமாக இயற்கை எய்திருந்தார்.
ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.
1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்த அவர், 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.
அதன்பின்னர் 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட ஆறுமுகன் தொண்டமான், அடுத்துவந்த அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்