மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி அம்மாநில காவல்துறையினரால் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இசை புயலாக ஜொலித்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
ஆஸ்கார் நாயகன் என இந்தியாவை பெருமை கொள்ளும் வகையில் மிகப் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். முன்னதாக சென்னையில் ஏ ஆர் ரகுமான் நடத்திய சூபி இசை நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் நேற்று முன்தினம், புனேவில் ஒரு இசை நிகழ்ச்சியை அவர் நடத்தி இருந்தார்.
அது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ராஜ் பகதூர் மில்ஸ் அருகே உள்ள மைதானத்தில் ஏ ஆர் ரகுமான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தனது இசையில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியை கடந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இறுதி பாடலை பாடிக் கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த காவல் அலுவலர் அனுமதி அளிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது. உடனே நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று கூற அவரும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
ஆனால் சற்றும் கோபப்படாத ஏ ஆர் ரகுமான் மிகவும் கூலாக நிகழ்ச்சி நேரத்தை தாண்டி சென்று விட்டது. அதனால் இத்துடன் நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். மேலும் இந்த சம்பவத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.




