ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே – 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

0
13

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேன்களான பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மருமணி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென்னெட் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரியான் புரி, தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டொய்னிஸ், கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் இங்க்லிஷ், கேப்டன் ஹெட்டும் களமிறங்கினர். தொடக்கமே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்க்லிஷ் (8), ஹெட் (17), கிரீன் (0), டிம் டேவிட் (0), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து மேக்ஸ்வெல் , ரென்ஷா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். மேக்ஸ்வெல் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையாக இருந்த ரென்ஷா அரைசதமடித்தார். கடைசி வரை போராடிய அவர் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே அணியில் பிளெஸ்ஸிங் முசரபானி 4 விக்கெட் , பபிராட் எவன்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here