நமுனுகல தோட்டக் கம்பனி ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் வேண்டுக்கோளுக்கு இணங்க உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான உரிய அறிவு இல்லாத ஊழியர் தமக்குரித்தான வேலையை தவிர்த்து வேறு வேலையில் வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட போது இவ்விபத்து நடந்ததா என்பதை கண்டறியுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அவ்வாறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தோட்டக் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான கனவரெல்ல தோட்டத்தில் வசித்து வந்த ஹர்ஷன் கணேஷ்மூர்த்தி என்ற 25 வயதுடைய தொழிலாளி ஒருவர் கடந்த 09ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார்.
அத்துடன், மின்சாரம் தாக்கியே அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக, பதுளை சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சாதாரண தொழிலாளி எனவும் மின்சார பராமரிப்பு பணியை செய்ய வற்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இ.தொ.காவின் வேண்டுகோளின் அடிப்படையில், உடனடியாக விசாரணை நடத்தி, தொழிலாளர் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.