இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அக்கரபத்தனை பிரதேசசபைக்குட்பட்ட அக்கரபத்தனை டொரின்டன் எம்.எச்.பிரிவில் நிர்மானிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட 48 வீடுகள் இன்று (04) திகதி தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் கையளிக்கப்படவுள்ளன.
குறித்த வீடுகள் கடந்த நல்லாட்சி காலத்தில் நிர்மானிக்கப்பட்ட போதிலும் குடிநீர், வீதி, மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததன் காரணமாக இந்த வீடுகள் கையளிக்க தாமதமடைந்தன.
அதனை தொடர்ந்து பயனாளிகள் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து இந்த வீடுகளுக்கு குடிநீர், பாதைவசதி, மின்சாரம் ஆகியன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளில் காணப்பட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சு சுமார் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபா செலவு செய்துள்ளது. ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள குறித்த வீடுகளில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு விறாந்தை, சமையலறை, குளியலறையுடன் கூடிய மலசல கூட வசதிகள் காணப்படுகின்றன.இந்த வீடுகளை நிர்மானிப்பதற்காக இந்திய அரசாங்கம் தலா ஒவ்வொரு வீட்டுக்கும் 10 லட்சம் செலவு செய்துள்ளது.
இது குறித்து பயனளிகள் கருத்து தெரிவிக்கையில்
நாங்கள் கடந்த காலங்களில் தொடர் வீடுகளில் மிகவும் கஸ்ட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தோம் பிள்ளைகளுக்கு சுதந்திரமாக படிக்க முடியாது வசதிகள் கிடையாது இந்த நிலையில் எங்களுக்கு நாளைய தினம் தனி வீடுகள் மிகவும் அழகான ஒரு இடத்தில் சகல வசதிகளுடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாங்கள் இலங்கை அரசாங்த்திற்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சிவபிரகாசம் சச்சிதாநந்தன் கருத்து தெரிவிக்கையில்..
குறித்த வீடுகள் கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீடுகளுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்பட்டதோடு மக்கள் குடியேற நிராகரித்து வந்ததனை தொடர்ந்து ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக பாதை மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் முகமாக 2 கோடியே 50 லட்சம் ரூபா செலவு செய்து மேற்படி வேலைத்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டு நாளை இக்குடியிருப்புக்கள் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அத்தனை குடியிருப்புக்களும் கையளிக்கப்படுவது விசேட அம்சமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.