இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜீவன், ராதா எம்.பிக்கள் சந்திப்பு

0
136

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தொடர்பான விடயங்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார ஜெய்சங்கரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடங்கிய உதவிகளுக்கும், அவற்றைச் செயல்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விசேட சந்திப்பின்போது, இந்தியாவின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நான்கு முன்னுரிமை அம்சங்களை உள்ளடக்கிய ஆவணமும் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது.

01•இந்தியா–இலங்கை கொள்கை மற்றும் சிந்தனை வழித்தடத்தை நிறுவனமயமாக்குதல்.

02•இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான நடைமுறை பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள்.

03•மலையகப் பகுதிகளுக்கான வெள்ளம் மற்றும் காலநிலை அனர்த்த முகாமைத்துவ உட்கட்டமைப்புகள் மூலம் அனர்த்த மீள்தன்மை.

04•சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட இளைஞர் ஈடுபாட்டுத் திட்டங்கள். போன்ற முன்னுரிமை அம்சங்களாகும்.

இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here