ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணியை 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 88 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்கடித்து இருந்தது. ஆனால் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு முடிவு இல்லாத போட்டி என 5 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 6-வது பந்து வீச்சாளர் இல்லாமல் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும்.
மேலும் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலும், தோல்வி அடைந்த ஆட்டத்திலும் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங்கே பலம்
சேர்த்தது.
வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து சதங்கள் விளாசி அசத்தியிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அவரிடம் இருந்து வெற்றிக்குரிய பங்களிப்பு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HinduTamil