இறக்குவானை கல்வி வளர்ச்சியில் இ.தொ.கா சாதித்துக் காட்டியது!

0
149

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எந்த ஒரு பாடசாலையும் தேசிய பாடசாலையாக இருக்கவில்லை. எனினும், ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தவாறு கல்வி வளர்ச்சி தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த காலகட்டத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆறு தமிழ் தேசிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவை பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஊடாக கெபினட் அமைச்சராக பதவி வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர், கௌரவ அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களிடம் முன்மொழிவுகளை வழங்கியிருந்தேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இறக்குவானை சென்.ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, அவர் நேரடியாக பாடசாலைக்கு விஜயம் செய்து, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களான நிர்ஷன் இராமானுஜம் மற்றும் அருண்பிரசாத் ரஞ்ஜன் ஆகியோர் எடுத்த முயற்சிகளை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

அதனைத் தொடர்ந்து, பாடசாலையை அண்மித்து காணப்பட்ட மஸ்தன்ன பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான காணியினை பெரும்பான்மையினர் அபகரிக்க முயற்சித்த வேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இறக்குவானை பிராந்திய மாவட்ட தலைவர் யோகநாதன் அவர்கள் எனக்கு அறிவித்ததை தொடர்ந்து அவ்விடயம் தொடர்பாக கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று 1 1/2 ஏக்கர் காணியினை பாடசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தோம்.

கடந்த வருட முற்பகுதியில் குறித்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு முதலாம் கட்ட பாடசாலைகளின் தெரிவின் போதே சென்.ஜோன்ஸ் கல்லூரி தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாடசாலைக்கு தேவையான ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் பாடசாலைக்கு கட்டிடங்களை அமைப்பதில் ஏற்பட்டிருந்த தாமத நிலமைகள் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் தலையீட்டின் மூலம் பாடசாலைக்கு வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களின் முயற்சிக்கமைய பாடசாலைக்கான காணி, அதனைத்தொடர்ந்து பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப் படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைக்கு தேவையான கட்டிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் சடுதியாக நடைபெற்று கடந்த வாரம் கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, இறக்குவானை பிரதேச தமிழ் மக்களின் பிள்ளைகள் கல்வி கற்கும், அண்மித்து காணப்படும் 16 தமிழ் பாடசாலைகளுக்கும் தாய் பாடசாலையான சென்.ஜோன்ஸ் தமிழ் கல்லூரி தற்போது சகல வளங்களுடன் கூடிய ஒரு பாடசாலையாக தரமுயர்த்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்த செயற்பாடுகளின் போது எம்மோடு கைகோர்த்து செயற்பட இறக்குவானை பிரதேச தமிழ் இளைஞர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here