இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 (T20) தொடர் இன்று (30) ஆரம்பமாகிறது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி பங்கேற்கும் இறுதி சர்வதேச ரி 20 தொடர் இதுவாகும். எனவே, உலகக் கிண்ணத்திற்குத் தயாராவதற்கு இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
புள்ளிவிபரங்களின்படி, இங்கிலாந்து அணி ரி 20 போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராகப் பலமான நிலையில் உள்ளது: இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையில் 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் இங்கிலாந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, இலங்கை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 தொடர் ஒன்றையோ அல்லது ஒரு தனிப்பட்ட போட்டியையோ இலங்கை அணி இதுவரை வெல்லவில்லை. கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தத் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்புடன் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது



