இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு!

0
39

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த மூன்று பிரதான சந்தைகளும் அந்த இழப்பை ஈடுசெய்து ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது கடந்த டிசம்பரில் அமெரிகாவுக்கான ஏற்றுமதி 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியானது 6.76% அதிகரித்து 141 மில்லியன் டொலர்களாக டிசம்பரில் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கான ஏற்றுமதியானது 12.95% எனும் பாரிய வளர்ச்சியுடன் 55.12 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளநிலையில் ஏனைய சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியானது இந்தக்காலப்பகுதியில் 4.06% குறைந்து 72.8 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2024 டிசம்பரை விட 2025 டிசம்பரில் ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்கள் அதிகமாகும்.

2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டில், மொத்த ஆடை மற்றும் துணி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வருடாந்த வளர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம் 12.48% உயர்வுடன் (1.58 பில்லியன் டொலர்) முன்னிலையில் உள்ளது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.15% அதிகரித்து 1.95 பில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 0.74% உயர்வுடன் 679.66 மில்லியன் டொலர்களாகவும் காணப்பட்டது. ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி 4.80% அதிகரித்து 815.78 மில்லியன் டொலர்களாகப் பதிவானது.

ஆடைத் துறையில் 5.0 பில்லியன் டொலர் இலக்கை எட்டியிருப்பது எமது ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துவதாக கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here