இத்தாலியில் வெனிஸ் திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அரங்கத்தின் அருகே, இஸ்ரேலின் காசா முற்றுகைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என ஏ.எப்.பி (AFP) ஊடகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு இத்தாலியில் இடதுசாரி அரசியல் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், ஜார்ஜ் குளூனி மற்றும் ஜூலியா ரொபர்ட்ஸ் முதல் எம்மா ஸ்டோன் வரையிலான சிறந்த ஹோலிவுட் திறமையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் சில கிலோமீட்டர் தொலைவில் அதிகாலையில் தொடங்கியது.
சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் வரையான எதிர்ப்பாளர்கள், கடற்கரையோர லிடோ மாவட்டத்தில் உள்ள விழாவின் நுழைவாயிலுக்கு மெதுவாக அணிவகுத்துச் சென்றனர் என AFP நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
“நீங்கள் அனைவரும் இனப்படுகொலைக்கான பார்வையாளர்கள்” என்ற ஒரு பதாகையினையும் இதன் போது அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
திரைப்படங்களை ஆஸ்கார் மேடைக்கு கொண்டு செல்லும் உலகின் பழமையான திரைப்பட விழாவான வெனிஸ், அதன் பொது மேடையைப் காசா மீது கவனம் செலுத்த பயன்படுத்த வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
“பொழுதுபோக்கு துறையை பலரும் பின்தொடர்வதில் நன்மை உண்டு, எனவே திரைத்துறையினர் காசா குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்று வெனிஸைச் சேர்ந்த 31 வயதான கணினி விஞ்ஞானி மார்கோ சியோடோலா பேரணியின் போது AFP இடம் கூறினார்.
“எல்லோரும் ‘இனப்படுகொலை’ என்று சொல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் குறைந்தபட்சம் எல்லோரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், காரணம் இது ஒரு அரசியல் சூழ்நிலை மாத்திரம்அல்ல. இது ஒரு மனிதாபிமான நிலைமை.” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போருக்கு எதிராக இன்னும் வலுவாகப் பேச வேண்டும் என்று இத்தாலிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு இதன் போது கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
இதேநேரம் வெனிஸ்4பாலஸ்தீனம் என்ற குழுவால் வரைவு செய்யப்பட்ட இந்தக் கடிததத்தில், “ஃபிராங்கண்ஸ்டைன்” இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ உட்பட திரைப்பட நிபுணர்களிடமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களைப் பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இதேபோன்ற ஒரு முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
“கடிதத்தின் நோக்கம் காசா மற்றும் பாலஸ்தீனத்தை வெனிஸில் பொது உரையாடலின் மையத்திற்குக் கொண்டுவருவதாகும்” என்று வெனிஸ்4பாலஸ்தீன இணை பணிப்பாளர் மற்றும் இயக்குனர் ஃபேபியோமாசிமோ லோஸி AFP இடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.