இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. அதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் தாக்குதல்: இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் தலை சாலையில் கிடந்தது’ என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
hindutamil




