ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது
ஈரான் பதிலடியாக சவுதி அரேபியாவின் யான்பு துறைகமுத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இயற்கை எரிவாயு மையங்கள் மற்றும் குவைத்தில் உள்ள 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ், இந்தியா உட்பட உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தின் முதுகெலும்பாக உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் நேரடியாகப் பாதிக்கும். குறிப்பாக, எல்என்ஜி-க்காக இந்தியா பெரிதும் கத்தாரை சார்ந்துள்ளது. இந்தியாவின் எல்பிஜி-யில் சுமார் 80-85% கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விநியோகத்தில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்போக்குவரத்தை ஈரான் தடுத்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு உலகம் போராடி வரும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.




