மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதை கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.