“கோட்டா கோ ஹோம்” என்ற கோஷத்துடன் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உணர்வுபூர்வமான போராட்டமானது இன மத நல்லிணக்கத்தை வலு படுத்தியுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“இரவு ,பகல் ,மழை ,வெயில், பனி, குளிர் என்று பாராமல் சகலரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைப் பதவி விலக கோரி போராடி கொண்டு வருகின்றார்கள்.
இந்தப் போராட்டமானது இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு போராட்டமாக திகழப் போகின்றது. 20வது அரசியல் அமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களும் கொண்டவராக இன்றைய ஜனாதிபதி இருக்கிறார்.
இவராகவே விரும்பி தனது பதவியைத் துறக்காவிட்டால் மக்களின் தொடர் போராட்டங்களின் ஊடாகவே இவர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்க முடியும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி செயலகத்தில் முன்னால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.
ஓரிரு நாட்களில் இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கேலி செய்து வந்துள்ள போதும் நேர்த்தியான போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கின்றனர்.
இன மத ரீதியாக பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தைச் சகலரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் என்பதே பலரின் நிலைப்பாடாகும்.
எனவே நாடெங்கும் முன்னெடுக்கப்படுகின்ற அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்து செல்லுகின்ற தொடர் போராட்டத்திற்கும் தொழிலாளர் தேசிய சங்கம் தனது முழுமையான ஆதரவை நல்குகிறது”என்றார்.