கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை தொலைந்திருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள கையொப்பத்தை உரிய முறையில் சான்றொப்பம் செய்துகொள்வது கட்டாயமாகும்.
மேலும், ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்காலிக அடையாளத்திற்கான ஏற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகள், நுண்ணறிவுக் கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 3,72,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 2,64,496 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 1,07,814 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




