புதுடெல்லி: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் இடம் பெறவில்லை. இதனால் முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடுவரோ அல்லது தொழில்நுட்ப அதிகாரியோ இடம்பெறவில்லை. 1998-ம் ஆண்டு உட்ரெக்ட் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே நடுவர் குழுவில் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா சார்பில் அமர்ஜித் சிங் பாவா (1990), தர்லோக் சிங் புல்லர் (1994), சதீந்தர் ஷர்மா (2002, 2006, 2010), ஆர்.வி. ரகு பிரசாத் (2010, 2014, 2018, 2023) ஆகிய 4 பேர் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இதில் ரகு பிரசாத் 200 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிய முதல் ஆசிய நடுவர் என்ற பெருமையை பெற்றார். அவர், கடந்து ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார். ரகு பிரசாத் கூறும்போது “முந்தைய உலகக் கோப்பை, ஒலிம்பிக், புரோ லீக் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படும் திறமையை மதிப்பீடு செய்தே எஃப்.ஐ.எச் நடுவர் குழு பெரிய போட்டிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கிறது. நிலையான திறமையே பிரதான அளவுகோலாக இருக்கும்” என்றார்.
பல ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பைகளில் பணியாற்றிய சதீந்தர் ஷர்மா கூறும்போது, “பாவா, புல்லர் ஆகியோருக்கு பிறகு, நானும் ரகுவும் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்தோம். ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மத்தியில் எங்களை நிலைநிறுத்துவது எளிதாக இருந்ததில்லை. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெறவில்லை என்றாலும், நான் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியாக அங்கு அதிகாரியாகப் பங்கேற்றேன்.
தொடர்ச்சியான திறமைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால், தற்போது நாம் பின்தங்கிவிட்டோம்” என்றார்.
ஹாக்கி இந்தியா அமைப்பின் 2025-ம் ஆண்டு மே மாத நிலவரப்படி, ஆடவர் நடுவர் கட்டமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும், மகளிர் கட்டமைப்பில் எழுபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் உள்ளனர். இருப்பினும், எஃப்.ஐ.எச் நடுவர் குழுவில் வெறும் ஆறு இந்திய ஆடவர்களும், 4 மகளிர் மட்டுமே உள்ளனர். ரகு பிரசாத்தின் ஓய்வு, இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துள்ளது. இதேபோன்று இந்தியாவிடம் வெறும் 4 ஆண்களும் இரண்டு பெண்களுமே எஃப்.ஐ.எச் தொழில்நுட்ப அதிகாரிகளாக உள்ளனர்.
சதீந்தர் ஷர்மா தொடர்ந்து கூறும்போது, “உள்நாட்டு நடுவர்கள் பெரிய சர்வதேசத் தொடர்களில் பணியாற்றாவிட்டால், அவர்கள் எப்படி அனுபவத்தைப் பெற முடியும்? உள்நாட்டு நடுவருக்கும் சர்வதேச நடுவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நவீன ஹாக்கியின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் நடுவர்களும் தேசிய பயிற்சி முகாம்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நம்மிடம் திறமை உள்ளது, ஆனால் அதிகாரிகளுக்குச் சம்மேளனத்தின் ஆதரவும் வாய்ப்புகளும் தேவை. அடுத்த உலகக் கோப்பை அல்லது ஒலிம்பிக்கில் இந்தியா பிரதிநிதித்துவம் பெற விரும்பினால், முறையான திட்டமிடல் அவசியம்” என்றார்.




