உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முறையான வேலைத்திட்டம்!

0
23

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல்  நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு, உணவுப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், அரசாங்கம், கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாயிகள் என்று, மூன்று தரப்பினராக தனித்தனியாகச் செயல்படாமல், அனைவரும் ஒரே தளத்தில் ஒரே நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாகச் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருப்பதாகவும், அதில் 40 சதவீதம் விதைகளைக் கொள்வனவு செய்வதற்கு செலவிடப்படுவதாகவும் விவசாயிகள் இங்கு சுட்டிக்காட்டினர். பயிர்களுக்கு உரங்களை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துதல், தரமற்ற உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளால் விளைச்சல் குறைதல் மற்றும் உயர்தர விதைகள் இல்லாமை போன்ற சிக்கல்கள் உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவு அதிகரிப்பதற்கு பிரதானமாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து இதுபோன்ற ஒரு கலந்துரையாடலை எந்த அரசாங்கமும் இதுவரை வழங்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடிய பின்னர், சதொச நிறுவனத்துடன் இணைந்து உருளைக்கிழங்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை உருவாக்கவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.200 முதல் 300 வரையிலான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்ததுடன், உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக தரமான உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளைத் தயாரிப்பதற்கும், உயர்தர விதைகளை உற்பத்தி செய்வதற்கும் விவசாயிகளுடன் இணைந்து கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் எதிர்காலத்தில் செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்குத் தேவையான அரசாங்க தலையீடுகளை நெறிப்படுத்த விவசாயிகள் பதிவுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.டீ. லால்காந்த மேலும் தெரிவித்தார்.

நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு நுகர்வு சுமார் 225,000 மெட்ரிக் டொன்கள் என்றும், அதில் சுமார் 70,000 முதல் 80,000 மெட்ரிக் டொன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், அதன்படி எஞ்சிய தொகையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் புள்ளிவிவரத் தரவுகளுடன் சுட்டிக்காட்டினர்.

கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க மற்றும் கமத்தொழில் அமைச்சு,கமத்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-11-18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here