ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவீய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (14.04.2022) நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகள், பெரியோர், சிறியோர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்தோடு, புத்தாண்டை முன்னிட்டு பாற்சோறு சமைத்து மக்களுக்கு வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.
(க.கிஷாந்தன்)