எதிர்ப்பை கைவிடும் ஒடுக்கப்பட்டவர்களின் குருதி சுற்றோட்டம் நின்றுபோகும்!

0
15

ஒடுக்கப்படுகின்ற,சமூகங்கள் எல்லாவற்றிலும் இந்த எதிர்ப்பு – மறுப்பு,நாளாந்தம் ஒவ்வொரு கணத்திலும் அவர்களுடன் இருக்கின்ற அந்த எதிர்ப்பு,மறுக்கப்படமுடியாதது என தெரிவித்துள்ள கவிஞர்சேரன் ருத்திரமூர்த்தி ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் எப்போது தமது எதிர்ப்பை கைவிடுகின்றார்களோ அப்போது அவர்களிற்கு இந்த குருதி சுற்றோட்டம் நின்றுபோகும்,ஆனால் அது நடக்காமலிருப்பதற்காகதான் நான் எழுதுகின்றேன் என தெரிவித்துள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற அவரது தமிழ் கவிதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,மிக நீண்டகாலமாக இத்தகையதொரு நிகழ்விற்காக நான் காத்திருந்தேன். இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் நான் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நாள்,இந்த நிகழ்வை, சாத்தியமாக்கியமைக்காக கவிஞர்கள் தோழர்கள் சஞ்சுலா பிரதீப் மற்றும் வெளியீட்டாளர்களிற்கு என்னுடைய மனம்கனிந்த நன்றிகள்.

இன்று என்னுடைய கவிதைகளை பற்றி நான் விரிவாக பேச முற்படவில்லை.ஆனால் எனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து இரண்டு கதைகளை சொல்ல விரும்புகின்றேன். இது நடந்தது 1980ம் ஆண்டு, அப்போது எனக்கு வயது பத்து , எனது அப்பா இலங்கை அரசாங்க சேவையின் உயர் அதிகார சேவையில் பணிபுரிந்தார்.மட்டக்களப்பு நகரில் அவர் உதவி அரசாங்க அதிபராக பணிபுரிந்தார்.அங்கு தங்குவதற்காக எங்களிற்கு ஒரு பங்களா தரப்பட்டிருந்தது. அரசாங்க ஊழியர்கள், உதவி அரசாங்க ஊழியர்கள் போன்ற முக்கியமான அரசாங்க ஊழியர்களிற்கு அரசாங்கம் இவ்வாறான பங்களாவை வழங்கும்.

எங்களிற்கு யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிருந்தது அதற்கு எங்கள் அப்பா வைத்த பெயர் நீழல் அரசாங்க ஊழியம் காரணமாக அப்பாவுடன் இணைந்து நாங்களும் பல்வேறு இடங்களிற்கு போகவேண்டியிருந்தது.இடமாற்றம் காரணமாக, மட்டக்களப்பு கொழும்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு.

எனது பழக்கம் என்னவென்றால் எந்த வீட்டிற்கு நாங்கள் சென்றாலும் அதன் முன்பக்கம் சென்று நீழல் என எழுதிவிடுவேன். அதேபோல தான் மட்டக்களப்பில் அரசாங்கம் எங்களிற்கு தந்த பங்களாவின் முன் பகுதியில் அழகான இடத்தில் நீழல் என எழுதினேன்.

அந்த காலத்தில் எனக்கு அழகான சித்திர எழுத்துக்களை எழுதி பழகுவதில் ஒரு பைத்தியம் இருந்தது. நான் காலையில் நீழல் என்பதை எழுதி வைத்துவிட்டேன் , மாலையில் வேலை முடிந்து அப்பா வீட்டை வருகின்றார்,வந்தவுடன் அவருக்கு நிறைய கோபம் வந்தது ஏன் இப்படி எழுதினாய் என கேட்டார்?நாங்கள் எங்கு போனாலும் எங்கள் வீட்டின் பெயர் அதுதானே என நான் தந்தையிடம் தெரிவித்தேன்.

அதற்கு அப்பா சொன்னார் ‘ இது அரசாங்கம் தந்தது அரசாங்கத்திற்கு சிங்கள மொழிதான் தெரியும்,சிங்களத்தில் தான் எழுதவேண்டும், தமிழில் எழுத முடியாது” நான் அப்பாவை கேட்டேன் ‘நீங்கள் ஒரு பெரிய தமிழ்கவிஞர் ஏன் உங்கள் தமிழ் மொழியில் ஏன் இந்த வீட்டில் எழுத முடியாது?நீங்கள் ஏன் தமிழில் எழுத மறுக்கின்றீர்கள்?” அது எனக்கு அப்பாற்பட்டது என அப்பா சொன்னார். அப்போது அப்பாவும் நானும் ஒரு சமரசத்திற்கு வந்தோம், அப்பா சொன்னார் சிங்களத்தில எழுதி பழகி சிங்கள மொழியில் எழுதுவோம்.தமிழில் சின்னதாக எழுதுவோம்.ஆங்கிலத்தில் எழுதினாலும் விளங்காது, பிரச்சினையில்லை.

இன்றைக்கு வரைக்கும் அதுதான் நிலை. பெரிய சாகித்திய விழா போன்றவற்றிற்கு போய் தமிழ் எழுத்தாளர்களும் வாங்குகின்றார்கள். இன்றைவரை இந்த நிலை மாறவில்லை அது ஒருபுறம் இருக்க,இந்த அனுபவத்திலிருந்துதான் நான் சிங்களத்தை எழுதக்கற்றுக்கொண்டேன். என்னால் அழகான முறையில் சிங்களத்;தை எழுத முடியும்.

உண்மையில் சொல்லப்போனால் என்னுடைய எல்லா கவிதைகளும், ஆரம்பகால கவிதைகளும் தற்போதைய கவிதைகளும் அரசியலில் இருந்தும்,சொந்த அனுபவங்களில் இருந்தும் இயற்கையிலிருந்தும் எழுந்த மாதிரிதான் தெரிகின்றது.ஆனால் இந்த எழுத்துரு, எழுத்துக்களை அழகாக எழுவதில் இருந்துதான் இந்த கவிதை ஆரம்பமானது.

இதுதான் ஏனைய கவிஞர்களிற்கும் எனக்கும் இருக்ககூடிய அடிப்படையான ஒரு வித்தியாசம். இரண்டாவது கதை என்னுடைய வழிகாட்டியான காமினி நவரணட்விற்கும் எனக்கும் இன்னுமொரு வழிகாட்டியான ஏஜே கனகரட்ணவிற்கும் இடையில் நடந்த உரையாடல்.

அப்போது நான் சட்டர்டே றிவ்யூ வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்,என்னுடைய ஆசிரியரும் வழிகாட்டியும் காமினி நவரட்ண அவர்கள்,வழமையாக நாங்கள் வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கு பேப்பரை வெளியில் கொண்டுவந்துவிடுவோம் ஆனால் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை நானும் ஏஜேவும் , என்னுடைய தமிழ் கவிதைகளை ஏஜே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது காமினிநவரட்ண உள்ளே வருகின்றார்,அப்போது காமினி என்ன சொன்னார் என்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது நல்லது,அதனை செய்வதற்கு நிறையபேர் இருக்கினம்,ஆனால் நாங்கள் உண்மையில் செய்யவேண்டியது என்னவென்றால் இதனை சிங்களத்தில் மொழிபெயர்க்கவேண்டும்.இது நடந்தது 1984.

ஆனால் அவ்வேளையில் தமிழில் இருந்து சிங்கள மொழிபெயர்ப்பை செய்யக்கூடியவர்கள், அவற்றை தோழமை உணர்வுடன் செய்யக்கூடியவர்கள் எல்லாம் எங்களிற்கு இருக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு,மகிழச்சி தரும்படியாக நிலைமை முன்னேறியிருக்கின்றது.அந்த பின்னணியில்தான் எனது கவிதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு இன்று வெளியானது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவிதை புரட்சியை கொண்டுவராது,கவிதை போரை உருவாக்காது,ஆனால் கவிதைகள் சாதாரண மனிதர்களுடைய பழுதுபடாத உள்ளத்தில் புகுந்து அவற்றை மெல்ல மெல்ல, கருத்தை மாற்றும்.

இது ஒரு மெல்ல மெல்ல நடக்கின்ற மாற்றம்.இலக்கியம் நமக்குதந்திருக்கின்ற ஒரு பெரிய கொடை இதுதான். இன்னுமொரு முக்கியமான கருத்தை குறிப்பிட விரும்புகின்றேன்,மொழிபெயர்ப்பு என்பது ஒரு தொழில் நுட்ப கலையல்ல,மொழிபெயர்ப்பு கற்கைகள் செயலமர்வுகள் என நிறைய நடக்கின்றன.அது நல்லது.

ஆனால் என்ன அடிப்படைஎன்றால் தமிழ் சமூகங்கள், சிங்கள சமூகங்கள், பாலஸ்தீன சமூகங்கள் போன்ற போராடுகின்ற சமூகங்களிற்கு இதில் என்ன அடிப்படை என்றால் மொழி பெயர்ப்பு என்பது உணர்வுத்தோழமை செயற்பாடு.அந்த உணர்வுத்தோழமை என்பது அரசியல் களத்தில் நடக்கலாம்,அது சமூக தளத்தில் நடக்கலாம் அதுபோல இந்த உணர்வுத்தோழமை என்பது கலை இலக்கிய படைப்பாற்றல் தளத்தில் நடக்கின்றது.

அதனுடைய ஒரு விளைவுதான் இந்த அருமையான நூல். இந்த உணர்வுத்தோழமை என்ற விடயத்தை தான் நான் கடந்த 15 வருடங்களாக மற்றைய மொழியில் உள்ள கலைஞர்களிற்கு ,மற்றைய மொழி படைப்பாளர்களிற்கு வலியுறுத்திக்கொண்டிருக்கின்றேன். இறுதியாக ஒரு கருத்தை சொல்லி முடிக்க விரும்புகின்றேன். இந்த கவிதைகளை நீங்கள் வாசித்தால் தெரியும் இந்த கவிதைகளின் அடிநாதமாக ஓடுவது ஒரு எதிர்ப்புணர்வு.ஒருவகையான எதிர்ப்புணர்வு.அதனை மாற்ற முடியாது.

ஒடுக்கப்படுகின்ற,சமூகங்கள் எல்லாவற்றிலும் இந்த எதிர்ப்பு – மறுப்பு,நாளாந்தம் ஒவ்வொரு கணத்திலும் அவர்களுடன் இருக்கின்ற அந்த எதிர்ப்பு,மறுக்கப்படமுடியாதது. அப்போது அது முடிவிற்கு வராத என்று மிகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளரிடம் ஒரு எழுத்தாளர் கேட்டார். அதற்கு கென்யா எழுத்தாளர் சொன்ன மறுமொழி என்னவென்றால் ஒரு மனிதனிற்கு அவனது உடலிற்குள் எப்போது இந்த குருதி சுற்றோட்டம் நின்றுபோகின்றதோ அப்போது அவர் இறந்துபோவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here