பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ள உள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக எதிர்வரும் 23ஆம் திகதி சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ அமைப்பு உட்பட ஏனைய சில சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒருமீ குழுமம் அறிவித்துள்ளது.
இதேபோன்று நாட்டின் சில பகுதிகளிலும் எதிர்வரும் தினங்களில் போராட்டங்கள் நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப்பாதையில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தன்னெழுச்சியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அதற்கான சூழ்நிலைகள் தற்போது இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.