ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களைத் தெளிவுபடுத்த எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்த அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்றுமுன்தினம் 08ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது கேள்வி கேட்பதற்கான வினாக்களை கடந்த 02ஆம் திகதியன்று முன்வைத்திருந்தேன். இந்த கேள்விகளை திருத்தம் செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருத்தம் செய்யப்பட்ட கேள்விகளை மறுநாள் 03ஆம் திகதியன்று முன்வைத்திருந்தேன். ஒருசில காரணிகளைக் குறிப்பிட்டு அந்தக் கேள்விகள் புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும், அன்றைய தினமே மீண்டும் கேள்விகளைத் திருத்தம் செய்து அவற்றை முன்வைத்திருந்தேன்.
இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம்(08) என்னால் இறுதியாக திருத்தம் செய்யப்பட்ட கேள்விகளை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது முன்வைத்திருந்தேன். இந்தக் கேள்விகள் செவ்வாய்க்கிழமை 07 ஆம் திகதி கிடைத்ததால் அதற்கு பதிலளிப்பதற்கு 02 வாரங்கள் கால அவகாசத்தை பிரதமர் கோரியிருந்தார். புறக்கணிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்த சிறப்புரிமை மீறல் விடயத்தை சிறப்புரிமை குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள் தாமதமாகவே கிடைத்ததாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயத்தில் பிரதமர் அலுவலகம் தாதமதாக செயற்பட்டுள்ளதா அல்லது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தாமதமாக செயற்பட்டுள்ளதா என்பதை ஆராயுமாறு கோருகின்றேன்’’ என்றார்.