நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசை நீடிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனால் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
டீசலுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. எனினும், போதுமான டீசல் இருக்கவில்லை என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் சாரதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், நுவரெலியாவிற்க்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீண்டும் தங்களது ஊருக்கு செல்ல தங்களது வாகனங்களில் போதியளவு டீசல் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்றதையும் அவதானிக்க முடிந்திருந்தது.
இதனால் அவர்கள் பெருந்தொகையை செலுத்தி நுவரெலியாவில் விடுதியில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
டீசல் பற்றாக்குறையால் மரக்கறிகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லவிருந்த லொறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்