நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நீடிக்குமிடத்து முழு நாடும் ஸ்தம்பிக்க கூடிய அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது தீவிரமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.முழு நாட்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசைக்கட்டியுள்ளது. இந்நிலை தொடருமானால் நாடு பெரும் அபாய நிலையை நோக்கி பயணிக்க வேண்டி வரும். காரணம் வெறுமனே வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் இதனால் பாதிப்படைவதில்லை சாதாரண மக்களுக்கும் இந்நிலையால் பாதிப்பு ஏற்ப கூடும். போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தால் மக்கள் பயணம் செய்வதில் சிரமம் ஏற்படும், அன்றாடம் பஸ்ஸில் வேறு இடங்களுக்கு சென்று பிழைப்பு நடாத்தும் வியாபாரிகளின் நிலை கேள்விக்குறியாகும், மீன்பிடியாளர்கள் பாதிக்கப்படுவர், முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுபோக்குவரத்து விடயங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இதற்கு ஒரு தீர்வை அரசாங்கம் விரைவில் எடுக்காத விடுத்து நாடு அதளபாதாளத்தை நோக்கி செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாக வேண்டி வரும் என குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்