எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஜனவரி 2 ஆம் தேதி போராட்டம் வெடித்தது. நாடு முழுவதும் பரவிய இந்த போராட்டம், கஜகஸ்தானின் பெரிய நகரமான அல்மாட்டியிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து கஜகஸ்தான் அதிபர், அல்மாட்டியிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் இரண்டு வார காலத்திற்கு அவரசநிலையை பிரகடனப்படுத்தினார். அதேநேரத்தில் கஜகஸ்தான் அரசும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாக அறிவித்தது. இருப்பினும் அல்மாட்டியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சில மணி நேரங்களுக்கு காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நீடித்தது. போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்தநிலையில் இந்த எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக கஜகஸ்தான் அரசு ராஜினாமா செய்துள்ளது.
கஜகஸ்தான் அதிபரும் அரசின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கான விலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவந்து, அந்த விலை கட்டுப்பாடுகளை பெட்ரோல், டீசல் மற்றும் பிற சமூக முக்கியத்துவம் வாய்ந்த நுகர்வோர் பொருட்களுக்கு விரிவுபடுத்தவும் இடைக்கால அமைச்சர்களுக்கு கஜகஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கஜகஸ்தான் நாட்டில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிவாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு விலை உயர்வை அடுத்து போராட்டம் வெடித்தது.
சுமார் 70% இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 2 கோடி மக்களை கொண்ட கஜகஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த வளமிக்க நாடாகும்.