மலையத்தின் தொழிலாளர்களின் சகல உரிமைகளும் மீறப்பட்ட நிலைமை காணப்படுகின்றது. இந்த பிரிச்சினைக்கு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது எரியும் பிரச்சினையாக காணப்படுவது இந்த கூட்டு ஒப்பந்தம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என்ற பெயரில் சம்பள உயர்வினை செய்து அதனை செய்த விதத்தினை காரணம் காட்டி தொழில் வழங்குநர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுக்கின்றனர். இதன் விளைவாக இன்று மலையகத்தில் பல தோட்டங்களைச் சேர்ந்த முழு தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் வேலை நாட்கள் குறைக்கப்படுகின்றன. பறிக்கும் கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரைநாள் சம்பளம் உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை அவர்களுக்கு சேமலாபநிதியம் ஓய்வூதியம், பிரசவ சகாய நிதி போன்றன வழங்கப்படுவதில்லை ஏனைய தொழில் சட்டங்கள் மீறப்படும் நிலையே காணப்படுகின்ற நிலையில் தொழில் வழங்குநர்களின் அழுத்தங்கள் தலைவிரித்தாடுகின்றன என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தெரிவித்தார். ஹட்டன் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்க அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்று மலையகப்பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆயிரம் ரூபா சம்பளத்தினை காரணம் காட்டி பல்வேறு கெடுபிடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இறப்பர் பாலின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. காலகாலமாக மலையக தோட்டப்புறங்களில் கடைபிடித்து வந்து சகல தொழில் சட்டங்களும் மீறப்பட்டுவருகின்றன. இந்த நிலைமையினை இன்று அரசும் அரசியல் வாதிகளும் பாராமுகமாக இருந்து வருகின்றனர். இதனை அரசு கவனிப்பது போல் தெரியவில்லை. இன்று தோட்டங்கள் துண்டாக்கப்படுகின்றன. தொழில் சட்டங்கள் மீறுவதனால் தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுகின்றோம்.
எமக்குத்தெரியும் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு இடைவெளிகள் இருக்கின்றன. இருந்தாலும் தற்போது கூட்டு ஒப்பந்தத்தினை கொண்டு அதன் பிறகு நாம் சேர்க்க வேண்டிய விடயங்களை சேர்த்து கொள்ளலாம். இன்று தொழிற்சங்க சம்மேளனம் எம்மோடு இணைந்துள்ளது நாங்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம் ஏனைய தொழிற்சங்கங்களும் எம்மோடு இணைந்து இந்த தொழிலாளர்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை நாங்கள் போராட்டத்தினை கைவிட மாட்டோம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்;. இப்போது நாங்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் முதலாம் கட்டத்தில் கடிதங்கள் மூலம் கலந்துரையாடல்கள் மூலம் இந்த பிரச்சினையினை தீர்க்க முற்பட்டோம் ஆனால் அவற்றிக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இப்போது நாங்கள் பகுதி பகுதியாக தொடர் போராட்டங்களை செய்ய முன்வந்துள்ளோம். அதிலும் சரிவரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுப்போம். அது மாத்திமின்றி கூட்டு ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு புறம் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்;. இந்த நாட்டின் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை பாதுகாக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது ஆகவே இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் உயர்நீதி மன்றத்தினை நாட வேண்டிய நிலை ஏற்படும்; அதே நேரம் ஆயிரம் ரூபா பிரச்சினை என்பது யாருக்கும் ஒரு புதிய பிரச்சினையல்ல. ஆகவே அரசியல் வாதிகளும் தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். கம்பனிகள் அன்றும் இன்றும் உச்ச இலாப நோக்காக கொண்டே செயப்பட்டு வந்துள்ளனர்.
எந்தெந்த காரணங்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ளதோ இந்த காரணங்களை அவர்கள் பற்றிக்கொள்வார்கள் சில காலங்களுக்கு முன்பு கொரோனா பிரச்சினையினை ஒரு காரணமாக வைத்து தொழிலாளர்களுக்கு அதிகூடிய சுரண்டல் நடைபெற்றது. தொழிலாளர்கள் தொழில் செய்தாலும் கொரோனா என்ற பிரச்சினையினை காரணம் காட்டி பிரச்சினையினை பேச முடியாது என்று இருந்தார்கள் அதே போல் தான் இன்று இந்த கூட்டு ஒப்பந்தத்தினையும் ஒரு சாட்டாக வைத்திருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் உபதலைவர் செல்லையா சிவசுந்தரம், விஸ்வாசம் ராஜலக்சுமி, இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவிச்செயலாளர் சமிந்த பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன்