எரிவாயு விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான்,
நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பழைய விலை 1493 ரூபாவாகவும், புதிய விலை ரூ .2,750 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டரின் பழைய விலை ரூபாய் 598 ரூபாவாகவும், ரூ .503 ஆல் அதிகரித்து அதன்படி .1,101 ஆக உயர்ந்துள்ளது. 2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் பழைய விலை 289 ரூபாவாகவும், 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் பழைய விலை 1856 ரூபாயாகவும், 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 2,840 ரூபாவாகும். 5 கிலோ எரிவாயுவின் பழைய விலை 743 ரூபாவாகவும்,393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர பொருட்கள், விமானக் கட்டணங்களின் விலைகள்,வாகன வரிகள்,நட்சத்திர விடுதிகள் போன்றவற்றின் செலவீனம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டால் இதன் தாக்கத்தை பொருளாதார ரீதியாக உயர்வானர்களே எதிர்கொள்ள நேரிடும். ஆனால், எரிவாயுவின் விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளமை சாதாரண பாரமர மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. அவர்களுக்கு இந்த இமாலய விலை அதிகரிப்பை ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது.
பொது முடக்கம் காரமாண தினக்கூலி வேலையில் ஈடுபட்டவர்கள் தொழில் இன்றி பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மேலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இந்த நவீன காலத்தில் மக்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாடானாது பாமர மக்கள் சாதாரணமாக வாழ ஏற்புடையதாக இருக்க வேண்டும், மக்கள் சுமைகள் இன்றி சுமூகமான வாழ்க்கை முறையை வாழக்கூடிய நிலைப்பாடு காணப்பட வேண்டும் ஆகவே, உடனடியாக இந்த விலை அதிகரிப்பை இரத்து செய்ய வேண்டுமெனவும் செந்தில் தொண்டமான் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.