ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்!

0
11

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership) நிறைவேற்றுப் பணிப்பாளர் டெரெக் லூய்டன் (Derek Luyten) உள்ளிட்ட குழுவினர் கடந்த 26 ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் அதிகாரிகள், அவர்களது செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போது, உலகளாவிய ரீதியில் தற்போது 15 சட்டவாக்க சபைகளுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்தனர். இதில் வரவுசெலவுத்திட்ட மேற்பார்வை மற்றும் நிதிப் பொறுப்பு, குழுக்களின் வினைத்திறனான செயற்பாடு, சட்ட வரைவு நடைமுறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுத்தல் போன்ற பல்வேறு செயன்முறைகளுக்கு சட்டவாக்க சபைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது அவர்களின் நோக்கமாகும் எனத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து தேவையான அறிவைப் பரிமாறிக்கொள்வதற்காக வருகைதந்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பதன் மூலம் சட்டவாக்க செயன்முறை எவ்வாறு வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றது என்பதை சபாநாயகர் இந்தக் குழுவினருக்கு விளக்கினார். மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் சட்டவாக்க சபையின் பங்கு, குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் மூலம் நடைபெறும் பணிகள் ஊடாக சட்டவாக்க சபை எவ்வாறு வலுவாக செயற்படுகின்றது என்பதையும் கௌரவ சபாநாயகர் விளக்கினார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்ற கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக மாற்றுவது குறித்தும் கௌரவ சபாநாயகர் இந்தக் குழுவினருக்குத் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான வளங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அக்குழுவினர் குறிப்பிட்டனர்.

ஆசியாவில் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்ட நாடாக, இலங்கை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாகவும், இதுவரை இலங்கைக்கு வழங்கிய ஆதரவை எதிர்காலத்திலும் வழங்குமாறு ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் உறுப்பினர்களிடம் கௌரவ சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இந்தத் தூதுக்குழுவினர் 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட அக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்தனர். நிதி பற்றிய குழுவின் பணிகள் மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்ட அலுவலகம், நிதி பற்றிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பணச்சூதாட்ட ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டமியற்றல் உள்ளிட்ட இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து குழுவின் தலைவர் விளக்கினார். அத்துடன், சட்டவாக்கச் செயன்முறை தொடர்பான இரு நாடுகளினதும் அனுபவங்கள் இதன்போது பரிமாறப்பட்டன.

அத்துடன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திரவையும் இந்தத் தூதுக்குழுவினர் சந்தித்தனர். துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் பணிகள் மற்றும் விடயப்பரப்பு, தற்போதுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் உயர் அதிகாரிகளுடனும் 26 ஆம் திகதி கலந்துரையாடினர். பணியாட்தொகுதியின் தலைவரும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். அரசாங்கச் சட்டங்கள் மற்றும் தனியார் உறுப்பினர்களின் சட்ட மூலங்கள் உள்ளிட்ட இரு நாடுகளின் சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றக் குழு அமைப்பு உட்பட பாராளுமன்ற முறைமை மற்றும் மரபுகள் போன்ற விடயங்களில் இதன்போது அறிவைப் பரிமாறிக்கொண்டனர்.

அத்துடன், இந்தத் தூதுக்குழுவினர் பாராளுமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here