ஏப்ரல் மாதத்துக்கான 1000 ரூபாய் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தி மஸ்கெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று மௌனித்து உள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிய போராட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தோட்டத் தொழிலாளர்கள் 700 ரூபாய் அடிப்படைச் சம்பளத்திற்கு வேலை செய்த அளவின் அடிப்படையிலேயே ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்று அரசாங்கமும் நீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் நிர்வகிக்கின்ற மஸ்கெலியா பிரதேச தோட்டங்களில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்து 50 ரூபாய் என்ற அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கான சம்பவத்தினை நிர்ணயித்துள்ளது.
இதனடிப்படையில் 14 கிலோ தேயிலை கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு 700 ரூபாய் சம்பளமும் 16 கிலோ தேயிலை கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு 800 ரூபாயும் 20 கிலோ தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. தொழிலாளர்கள் அந்த சம்பளத்தை பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கிவிட்டு ஏப்ரல் மாதம் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கம் ஒன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று பாற்சோறு வழங்கியும் கேக் வெட்டி கொண்டாடியதை மஸ்கெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் மறக்கவில்லை.
ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் தற்போது வேலை செய்யும் அளவிற்கு ஏற்றவகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் முன்வர வேண்டும் இல்லாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் மேலும் விரிவு அடையலாம்.