மாணவனை வடிவமைப்பதற்கும் நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. சிறந்த வழிகாட்டிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் அளப்பெரிய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்
தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,மாணவர்கள் பேறும் புகழும் பெறும் பொழுது அவர்களை முதலில் பெருமையோடு கொண்டாடி மகிழும் உயர்குணம் நிறைந்தவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான சிறந்த பணி ஆகும். பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு ஈடுயினை கிடையாது.
நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களை நாம் போற்ற வேண்டும்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சமுதாயம் ஆசிரியர்களை இறைவனுக்கு சமமாக மதிக்கிறது. நாம் எழுதவும், பேசவும், பழகவும், வாழவும் வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயம் போற்றப்பட வேண்டும். எண்ணற்ற மாணவ சமுதாயத்திற்கு என்றென்றும் ஏணிப்படிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் அறியாமை இருள் அகற்றி, அனைவர் வாழ்வும் மலரச் செய்தவர்கள்.அத்துடன் இலங்கையில் இன்று ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விரைவாக தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது அவா என்று ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.