அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில் ஓர் இடத்தில் குவியலாக எட்டு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிக்கப்பட்ட ஓர் இடத்தில், சில அடிகளைக் கொண்ட சுற்றளவில் எட்டு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை,இந்தப் புதைகுழியில் இருந்து மேலும் பல என்புத்தொகுதிகள் மீட்கப்படுவதற்கான சாத்தியங்களையே வெளிப்படுத்துகின்றது என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த என்புத்தொகுதிகள் நேற்று அல்லாமல், இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளின் துல்லியமான இலக்கமிடல் நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தாயத்து, மூன்று சட்டைப்பொத்தான்கள், நாணயங்கள் என்பனவும் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 45 நாட்கள் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை 43 நாட்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் சனிக்கிழமையுடன் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முடிவுறுத்தப்படவுள்ளது.
அதேவேளை புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் புதைகுழிகள் காணப்பட்டலாம் என வலுவாக நம்பப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதி அகழ்வு பணிக்காக தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் மற்றும் அதற்கான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.