ஒரே இடத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிகளால் தெரிவிப்பு.

0
177

நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறு சிறு கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களை மூடப்பட்டு, ஒரே இடத்தில் மாவட்டத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்று, மாவட்ட வைத்திய அதிகாரிகளால் (18) திகதி தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், நுவரெலியா நகர மண்டபமான சினிசிட்டா உள்ளக அரங்கில், 500 கட்டில்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அதி விசாலமான கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய முகாமிலேயே, இனிவரும் நாள்களில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்படுவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் செனவிரத்ன, “நுவரெலியா மாவட்டத்தில், நான்கு கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன. இதில் சிறு சிறு மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொற்றாளர்கள், நகர மண்டப மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்படுவர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

“நுவரெலியா மாவட்டத்தில், 650 கட்டில் வசதிகள் கொண்ட புதிய மத்திய தனிமைப்படுத்தல் நிலையங்களாக, நுவரெலியா நகர மண்டபம் மற்றும் கந்தேஎல்ல பயிற்சி நிலையம் என்பன உருவாக்கப்பட்டுள்ளன.

“தற்போது இம்மாவட்டத்தில் இருந்து கண்டறியப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வீடுகளிலும் தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை, உடனடியாக நுவரெலியா நகர மண்டப முகாமுக்கு அனுமதிக்க உள்ளோம். குளிர் பிரதேசம் என்பதால், தொற்றாளர்களுக்குச் சுடுநீர் உள்ளிட்ட சூடான இயல்பு நிலையை உருவாக்கவும் ஹீட்டர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

“மேலும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய பிசிஆர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இப்போது இரண்டு இயந்திரங்கள் உள்ளன. எனவே, பிசிஆர் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு, அறிக்கைகள் தாமதமின்றி வழங்கப்படும்” என்றார்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here