ஓய்வுபெற வேண்டிய தேவை தனக்கில்லை என்றும், பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிக்க உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன்.
அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம். எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. எனவே உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.
நாட்டின் தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் எனவும் பிரதமர் மஹிந்த இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.