கண்டி எசல பெரஹெரா உற்சவத்தின் முதல் கும்பல் பெரஹெராவில் கதிர்காமம் தேவாலயத்தைச் சேர்ந்த கனேதென்ன கெம்பிட்டிய வலவ்வவில் மெனிகே யானையுடன் சென்ற உதவி யானைப் பாகனின் உடலம் இன்று (31) காலை கண்டி வாவியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானைனைப் பாகன் அரநாயக்க, பொல்லபேகொடவைச் சேர்ந்த 28 வயதுடைய அச்சலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரஹெராவுக்குப் பின்னர், பிரதான யானைப் பாகன் யானையை ஓய்வெடுக்க அழைத்துச் சென்றுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே அறிக்கை வெளியிட முடியும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பில் கண்டி மற்றும் மாத்தளை பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சுதத் மாசிங்கவின் உத்தரவின் கீழ் கண்டி காவல்துறை தலைமையகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.