கம்பளை உடபளாத்த பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு உடபாலத்த பிரதேச பிரதேச சபை காரியாலயத்தில் 10.04.2018 அன்று காலை 09.00 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி. மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.பிரதேச சபையின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான டி.ஜீ. குணசேனவும், உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவான அசேல அமரசேனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர், உப தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.
இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான டி.ஜீ. குணசேனவும், ஏ.டீ. அகலவத்த ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
இதில் 26 வாக்குகளைப் பெற்று டி.ஜீ. குணசேன அவர்கள் தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட ஏ.டீ. அகலவத்த அவர்களுக்கு 16 வாக்குகளே பெறமுடிந்தது.
இதேவேளை உபதலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஞ்சுள திஸாநாயக்க அவர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அசேல அமரசேன அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் அசேல அமரசேன 23 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட மஞ்சுள திஸாநாயக்கவுக்கு 18 வாக்குகளே பெறமுடிந்தது.
43 உறுப்பினர்களைக் கொண்ட உடபளாத்த பிரதேச சபை தலைவர், உப தலைவர் தெரிவு போட்டியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.
உடபளாத்த பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சிக்கு 07 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 16 ஆசனங்களும், ஒருமித்த முற்போக்கு கூட்டணிக்கு 03 ஆசனங்களும், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு 01 ஆசனமும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 01 ஆசனமும், கிடைக்கப்பெற்றன.
(க.கிஷாந்தன்)