கலஹா சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம் சுகாதார அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு வேலுகுமார் எம்.பி. அவசரக் கடிதம்

0
205

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சர், மத்தியமாகாண ஆளுநர், மத்தியமாகாண சுகாதார அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்அத்துடன், மேற்படி சம்பவம் தொடர்பிலும், தோட்டப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது அவையின் கவனத்தையும் அவர் ஈர்க்கவுள்ளார்.

இதுதொடர்பில் வேலுகுமார் எம்.பியால் இன்று ( 29.08.2018) விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காய்ச்சால் காரணமாக கண்டி – கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாததால் அக்குழந்தை உயிரிழந்துவிட்டது என சுட்டிக்காட்டி – அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் குழந்தையின் பெற்றோரும், பிரதேச மக்களும் வைத்தியசாலைக்கு முன்திரண்டு நீதிகோரி போராடினார்கள்.

மக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றமான நிலைஉருவானது. இதையடுத்து பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கேள்விபட்ட மறுகணமே மத்தியமாகாணத்துக்கு பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தேன். அதுமட்டுமல்ல, நீதிகோரி போராடும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் வலியுறுத்தினேன்.

அதன்பின்னர் நேரடியாக களத்துக்கு சென்று உயிரழந்த குழந்தையின் பெற்றோருடனும் , பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினேன். வைத்தியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள், பொலிஸாரின் உத்தரவை மீறினார்கள் என்ற அடிப்படையில் எம் இளைஞர்கள் பழிவாங்கப்படக்கூடாது எனவும் திட்டவட்டமாக எடுத்துரைத்தேன்.

தோட்டப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் பலபிரச்சினைகள் நிலவிவருகின்றன. அவை குறித்து பலதடவைகள் சுட்டிக்காட்டியும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வைத்தியர்களுக்கான தட்டுப்பாடே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.

இவ்விடயத்தை சுட்டிக்காட்டி மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசின் சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து – இதுவிடயத்தில் உடனடியாக தலையிடுமாறு கோரவுள்ளேன். இதுவிடயத்தில் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் உறுதியாகவே இருக்கின்றனர்.

குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும். எவ்வித மூடிமறைப்பும் இடம்பெறக்கூடாது என பொலிஸ்மா அதிபரிடமும் கோரியுள்ளேன்.

அதேவேளை, சட்டத்தையும், ஒழுங்கையும் காக்கும் வகையில் எம்மக்களும் செயற்படவேண்டும். இல்லையென்றால் பழிவாங்கும் நோக்கில்எம்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடக்கூடும். எதுஎப்படியோ இது விடயத்தில் நீதி கிடைக்கும்வரை எம் போராட்டம் ஓயாது என்பதையும் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்” என்றார்.

 

லயத்து பொடியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here