கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 204வது கொடியேற்ற விழா ஆரம்பம்!

0
35

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 204 வது கொடியேற்று விழா இன்று (21) ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .

கொடியேற்று தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை காணமுடிந்தது
இந் நிகழ்வில் , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,முஸ்லிம் கலாச்சார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம் பிர்னாஸ் ,கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,முன்னாள் உறுப்பினர் ஏ.எம் ரியாஸ்(பெஸ்டர்),கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ் அமீர் அலி,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம் மஜீட்,நிர்வாக உத்தியோகத்தர் ஏ,சி.எம் பழீல் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ்,பொருளாளர் எஸ்.எம்.ரிப்னாஸ் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், மற்றும் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மற்றும் கல்முனை கண்ணகி அம்பாள் ஆலய நிர்வாகிகள் என முக்கிய பிரமுகர்கள்,பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here