கல்வியின் ஊடாக நல்ல பிரஜைகளை உருவாக்க ஆசிரியர்கள் குத்து சண்டையில் ஈடுப்பட்டால் சமூகம் முன்னேற்றமடையாது – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு….

0
200

சமூகத்திற்கு தேவையானதை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் இருக்கின்ற நிலையில் நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் தான் இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.கொத்மலை, இறம்பொடை இந்து தேசிய கல்லூரியில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு 27.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலைகளில் போடப்படும் சிறந்த அடித்தளமே நாளைய சமூதாயத்தில் நல்ல பிரஜையாக உருவாக்க வழிவகுக்கின்றது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன் பாடசாலை ஒன்றின் மைதானத்தில் இரு ஆசிரியைகள் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் மோதலை அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்று விலக்கிவுள்ளனர்.

நல்லதோர் சமூதாயத்தை உருவாக்க கூடிய இவர்கள் இவ்வாறு நடந்துக்கொண்டமைக்கு எதிராகவும், இவர்களை உடனடியாக பணியிலிருந்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அமைச்சருடன் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நல்ல மாணவர்களை உருவாக்குவதற்கும், கல்வியின் பெறுபேறுகளை உயர்த்துவதற்கும் பாடுபட கூடியவர்கள் ஒருபுறமும் இவ்வாறு சண்டைக் கொண்டு முழு ஆசிரியர் சமூகத்திற்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும் ஆசிரியர்கள் மறுபுறுத்திலும் உள்ளனர்.

இவ்வாறு மோதலில் ஈடுப்பட்டுக் கொண்டு ஆசிரியைகள் வைத்தியசாலைக்கு சென்றும் கூட அங்கும் மோதலில் ஈடுப்பட்டுக் கொண்டதாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இவ்வாறானவர்களின் ஊடாக எதிர்காலத்தில் கல்வி சமூகம் முன்னேற்றமற்ற பாதையை நோக்கி செல்ல கூடிய வாய்ப்புள்ளது.

இவ்வாறு சண்டையிடுபவர்களுக்கு பாடசாலை மைதானங்களில், குத்து சண்டை மைதானம் அமைத்து போட்டிகளும் நடத்தப்பட வேண்டும்.

எனவே கழித்தல் ரீதியில் சிந்தித்து நாடகம் ஆடாமல் கூட்டல் ரீதியில் சமூகத்தை முன்னேற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும் எனவும், எதிர்கால சமூகத்தை கல்வியின் ஊடாக முன்னேற்ற இதயசுத்தியுடன் செயலாற்ற முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here