களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்!

0
155

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளுகின்ற விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபருக்கு பணத்திற்காக குறித்த மாணவி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியுடன் விடுதிக்கு ஒன்றாக சென்ற அவரது நண்பியின் காதலன் குறித்த மாணவியை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனடிப்படையில், பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை உயிரிழந்த மாணவியின் நண்பியினுடைய காதலனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, மாணவியின் மரணம் தற்கொலையா? கொலையா? என இன்னும் உறுதியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு செய்தது யார் என்பதை இதுவரை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

கைதான பிரதான சந்தேக நபர் இருதய நோயாளி எனவும், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, மாணவியின் கால் மற்றும் மார்பகத்தில் பற்களின் அடையாளங்கள் காணப்படுவதாகவும், இதனால் சந்தேக நபரை சட்ட வைத்தியர் ஒருவரை பார்வையிட அனுமதிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின்னர், சந்தேகநபர் மே 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம், உயிரிழந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்களிடமும் அவருடன் சென்ற 19 வயதுடைய அவரது நண்பியிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினர் மேற்கொண்டுவரும் தீவிர விசாரணைகளில் இன்னும் பல உண்மைகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here